செவ்வாய், 9 டிசம்பர், 2014

குளிர் காலத்தில் கொஞ்சும் அழகு!


ஆங்காங்கே வெண்மை நிறத் திட்டுகளுடன் வறண்டு போகிற சருமம்…பொடுகும் பிசுபிசுப்புமாக பிரச்னைதருகிற கூந்தல்…சொரசொர கைகள்… தடித்தும் வெடித்தும் போகிற பாதங்கள்…இன்னும் இப்படி பனிக்காலத்தில் படையெடுக்கும் அழகுப் பிரச்னைகள் ஏராளம். வெயிலைப் பழித்த வாய், குளிரின் கொடுமையில் அனலுக்குத் தவிக்கும். ”வெயில் காலத்தைவிட, பனிக்காலத்தில் ஏற்படுகிற அழகுப் பிரச்னைகள் அதிகம். குளிர்காலம் முடிகிறவரை சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே, சருமம் மற்றும் கூந்தல்
அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்” என்கிறார் உஷாஸ் பியூட்டி கிளினிக் உரிமையாளர் உஷா.”வெயில் காலத்தில் உபயோகித்த க்ரீம் மற்றும் லோஷன்களுக்கு தற்காலிகமாக விடை கொடுங்கள். பனிக்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள அழகு சாதனங்களையே உபயோகியுங்கள். தரமான மாயிச்சரைசர் வாங்கிக் கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் முகம் கழுவிய உடனேயும், ஒவ்வொரு முறை ஈரத்தில் கைகளை வைத்த பிறகும் மாயிச்சரைசர் தடவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் ஹேண்ட்பேக்கில் மாயிச்சரைசர் இருக்கட்டும். சருமம் லேசாக ”வறள்”கிற மாதிரி உணர்ந்தாலும் உடனே மாயிச்சரைசர் தடவ மறக்காதீர்கள். சன் ஸ்கிரீன் மட்டும் விதிவிலக்கு. வெயில் காலத்தில் மட்டுமின்றி, பனிக்காலத்திலும் சன் ஸ்கிரீன் அவசியம். குறைந்த அளவு எஸ்.பி.எஃப் உள்ளதும் கோகோ பட்டர், ஷியா பட்டர் அல்லது கற்றாழை கலந்ததும், மாயிச்சரைசர் அடங்கியதுமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவும். வருடம் முழுக்க கூந்தலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும், பனிக்காலத்தில் பலவிதமான பிரச்னைகள் தலைதூக்கும். அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர் காலத்தில் கூந்தலை மிகவும் வறண்டு போகச் செய்யும். சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகித்து தலைக்கு மிதமாக மசாஜ் செய்து விட்டு, காலையில் எழுந்ததும் மிதமான ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். குளிர் காலம் முடிகிற வரை கூந்தலுக்கு ட்ரையர் உபயோகிப்பது, ஸ்ட்ரெயிட்டனிங் மாதிரியான சிகிச்சைகளை செய்து கொள்வதைத் தவிர்க்கவும். அடிக்கிற குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் தண்ணீரில் குளிப்பது இதமாகத்தான் இருக்கும். ஆனால், வெந்நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை அறவே நீக்கி விடும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது. சோப்புக்கு பதில் பாடி வாஷ் அல்லது குளியல் பொடி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும். பனி எட்டிப் பார்க்க ஆரம்பித்ததுமே சிலருக்கு உதடுகள் வெடித்து ரத்தமே கசியும். வைட்டமின் இ உள்ள லிப் பாமை அடிக்கடி உதடுகளில் தடவிக் கொள்வது அவற்றை வறண்டு, வெடிக்காமலிருக்கச் செய்யும். உதடுகளில் தோல் உரியாமலிருக்க, லிப் பஃப் உபயோகிக்கலாம். இதை இரவில் உதடுகளின் மேல் மென்மையாகத் தேய்த்துவிட்டு, காலையில் துடைத்து விடலாம்.பாத வெடிப்பும் இந்த நாட்களில் தவிர்க்க முடியாதது. வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை ஊற வைத்துத் தேய்த்து, துடைத்து விட்டு, தரமான ஃபுட் க்ரீம் அல்லது வாசலைன் தடவிக் கொள்ளவும். அதற்கு மேல் காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு படுத்துவிட்டு, காலையில் கழுவி விட்டால், பாதங்கள் வெடிப்பின்றி மென்மையாக இருக்கும். வீட்டிலேயே செய்ய சில சிகிச்சைகள்… அவகேடோ எனப்படுகிற பட்டர் ஃப்ரூட் பனிக்கால சருமப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். கரும்பச்சை நிறத்தில் மென்மையான பழமாகத் தேர்ந்தெடுத்து, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பாகத்தை சுரண்டி எடுக்கவும். அத்துடன், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து மசித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிடவும். சரும வறட்சியைப் போக்கி, சருமத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளையும் அளிக்கக் கூடியது இந்த பேக். ஐந்து பாதாம் பருப்புகளை எடுத்து, பாலில் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அத்துடன் சிறிது தேன், சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கைகளில் வட்டமாகத் தேய்த்து ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் சோப் உபயோகிக்காமல் கழுவவும். இது சருமம் சுருக்கங்கள் இன்றியும் வறண்டு போகாமலும் இருக்கஉதவும். 1டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர், கால் டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம், அரை டீஸ்பூன் ஓட்ஸ் பொடி எல்லாவற்றையும் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து, கால் மணி நேரம் ஊற வைத்த பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதுவும் சருமத்தை இளமையுடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக