ஞாயிறு, 17 ஜனவரி, 2016

கர்ப்ப கால கவனிப்பு


1. கர்ப்ப காலத்தில், முதல் மூன்று மாதங்கள் செய்யக் கூடாதது?
இயல்பாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்யலாம். தண்ணீர் நிரம்பிய குடம் மற்றும் எடை மிகுந்த பொருட்களை தூக்கக்கூடாது.
2. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்திலிருந்த உடல், மன மாற்றங்கள், இரண்டாம் காலகட்டத்திலும் நீடிக்குமா?

இதை தேன்நிலவு காலகட்டம் என்போம். வாந்தி மற்றும் சோர்வான உணர்வு மறைந்து, சுறுசுறுப்பாக காணப்படுவர். நன்றாக சாப்பிடத் துவங்குவர். முதல் மூன்று மாதத்தில் எடை சற்று குறைய நேர்ந்தாலும், இரண்டாம் கால கட்டத்தில் எடை கூடும்.
3. கர்ப்பத்தின் போது உடல் எடை எவ்வளவு அதிகரிக்கலாம்?
உயரத்திற்கேற்ற எடை இருந்தால், 10 முதல், 11 கிலோ வரை எடை கூடலாம். ஆனால், உடல் பருமன் உள்ளவர்கள், 6 கிலோ முதல், 10 கிலோ வரை கூடலாம். உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருப்பவர்கள், 10 கிலோ முதல், 12 கிலோ வரை கூடலாம்.
4. குழந்தையின் அசைவுகளை எப்போது உணரலாம்?
முதல் கர்ப்பமாக இருந்தால், 18 முதல், 20 வாரத்திற்குள் தெரிய வரும். இரண்டாவது குழந்தையாக இருந்தால், 16 முதல், 18 வாரத்தில் தெரியும். ஆரம்பத்தில், பட்டாம்பூச்சி சிறகடிப்பதுபோல், மெலிதான உணர்வு அவ்வப்போது இருக்கும். மற்றபடி, குழந்தை எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். எட்டி உதைப்பது போல் உணர, மேலும் சில வாரங்கள் ஆகும்.
5. கர்ப்பத்தின் இரண்டாம் கால கட்டத்தில், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?
குழந்தை வளர வளர, கர்ப்பப்பை விரிவடையும். அதனால், வயிற்றில் தோல் பகுதி விரிந்து, தழும்பு ஏற்படும். இதைத் தவிர்க்க இயலாது. மாய்ஸ்ச்சரைசர் தடவி, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு, சருமத்தின் சில பகுதிகள் கருமையடைய ஆரம்பிக்கும்.
6. கர்ப்பத்தின்போது கால் பாதம் வீக்கமடைவது ஏன்?
உடலில் நீர் அதிகமாவதால், அது பாதங்களை சென்றடைந்து அங்கேயே தேங்கிவிடும். அதனால், கால் வீக்கமடைகிறது. எனவே, உட்காரும்போது கால்களை சற்று மேலே உயர்த்தி வைத்துக்கொள்வது நல்லது.
7. கர்ப்பத்தின் இரண்டாம் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?
கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதோடு நடைபயிற்சியும் அவசியம். கர்ப்ப காலத்திற்கு என்றே, உடற்பயிற்சி வகுப்புகள் உள்ளன. அதை, தேர்ந்த நிபுணர்களிடம் கற்றுக் கொள்வது நல்லது.
8. கர்ப்பத்தின்போது தடுப்பூசிகள் அவசியமா?
‘டெட்டனஸ்’ நோய் தாக்காமல் இருக்க, ‘டெட்டனஸ் டாக்ஸாய்ட்’ ஊசி அவசியம் போட வேண்டும். கர்ப்பம் உறுதி செய்தவுடன் முதல் ஊசியும், ஆறு வாரங்கள் கழித்து இரண்டாவது ஊசியும் போட வேண்டும்.
9. உணவு தவிர சப்ளிமென்டாக என்ன எடுக்க வேண்டும்?
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இரும்புச்சத்து, ‘வைட்டமின் பிடுவல்’ மற்றும் ‘போலிக் ஆசிட்’ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு, மருத்துவர் அறிவுரைப்படி, கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ நிறைந்த மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
10. இரண்டாம் கால கட்டத்தின்போது, என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
மாதத்திற்கு ஒருமுறை, மருத்துவரை சந்திக்க வேண்டும். பின், ரத்த அழுத்தம், எடை, சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 18 முதல், 22 வாரங்களில், குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக உள்ளதா அல்லது ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்பதை அறிய, ஸ்கேன் பரிசோதனைகள் செய்ய வேண்டும். மேலும், குழந்தையின் வளர்ச்சி, இதயத்துடிப்பை கண்காணிக்க வேண்டும். 24 முதல், 28 வாரங்களில், கர்ப்ப கால நீரிழிவு இருக்கிறதா என்று ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.