ஞாயிறு, 24 மே, 2015

உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!



தோட்டங்களில் வேலி மரங்களாக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் இலைகள், அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது. அகன்றும் பெரிதுமாக இருக்கும் இதன் இலைகள், துவர்ப்புச் சுவை கொண்டவை.

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுவலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப்பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.
ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்து, காலை மாலை இரு வேளையும், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
இரண்டு அவுன்ஸ் கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். இது வயிற்றுப்போக்கைக் குணப்படுதச் சிறந்த மருந்து.
பெண்கள், கல்யாண முருங்கை இலை ரசத்தைத் தொடர்ச்சியாகக் காலை மற்றும் மாலை வேளைகளில், தலா இரண்டு அவுன்ஸ், இரண்டு அல்லது மூன்று  மாதங்கள் தொடர்ந்து உண்டுவர, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். உடல் பருமன் குறையும், மலட்டுத்தன்மை நீங்கும்.
பாலூட்டும் தாய்மார்கள், தேங்காய்ப்பாலுடன் கல்யாண முருங்கை இலையைச் சமைத்துச் சாப்பிட்டால், பால் நன்கு சுரக்கும்.
ஒன்றிரண்டு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றை, காலை, மாலை இருவேளையும் உண்டுவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையும் நீங்கும்.
கல்யாண முருங்கை இலையை அம்மியில் நசுக்கி, மேகநோயால் ஏற்படும் அரையாப்புக்கு (நெறி கட்டுதல் முதலான பிரச்னைகள்) வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை இலையை, ஒன்றிரண்டாய் நறுக்கி, வெந்நீர் சேர்த்து, பொறுக்கும் சூட்டில் மூட்டை சுற்றிக் கட்டினால், மூட்டு வாத நோயால் ஏற்படும் வலி நீங்கும்.
கல்யாண முருங்கை இலை சாற்றைக் காதில் விட, காதுவலி நீங்கும். பல் வலி இருக்கும் இடத்தில் இலைச்சாற்றை விட்டால் பல் வலிநீங்கும்.
கல்யாண முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக