ஞாயிறு, 29 மார்ச், 2015

அழகாக்கும் ஆயுர்வேதம்!


ளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை, முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக ஆண்களின் முரட்டு சருமத்துக்கான கிரீம்கள் சந்தையில் பிரபலம். உண்மையில் இவற்றால் பலன் பெரிதாக இருக்காது. ஆண்களுக்கு அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்க, ஆயுர்வேதத்திலேயே ஏராளமான சிகிச்சைகள் இருக்கின்றன.
முடி கொட்டுதல்
அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில் தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது. முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுப்பதே சிறந்தது. செம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால், வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தலைக்கு மசாஜ் செய்வதுவந்தால், மன அழுத்தம் குறையும். தினமும் தலைக்குப் பாதாம் எண்ணெய் தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும். பாதாம் எண்ணெய் நன்றாக  முடி வளர உதவும். இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது. உடல்வாகைப் பொறுத்து, ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மாறுபடும்.
கருவளையம்
கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன்களை தூங்காமல் அதிக நேரம் பயன்படுத்துவதால், கண்களை சுற்றிக்் கறுப்பு நிறத் திட்டுகள் படியும். இதனைத் தவிர்க்க, கண்ணுக்கு மசாஜ் அவசியம். காலை எழுந்த பிறகும் இரவு தூங்கும் முன்பும், மோதிர விரலால் நல்லெண்ணையைத் தொட்டு, கண்களைச் சுற்றி மென்மையாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்துகொள்ளலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு நிமிடம் நன்றாகக் கண்களை மூட வேண்டும். கண்களில் ஈரப்பதம் குறைந்தால், அவ்வப்போது லேசாகக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, கண்களைத் துடைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாகக் கண்களைச் சிமிட்டுவது அவசியம்.
கறுமை நிறத் திட்டுகள்
ஐந்து கிலோமீட்டருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு, கை, கால் மற்றும் முகத்தில் கருமை நிறத் திட்டுகள் உருவாகும். நாளடைவில் தோலின் பொலிவு மறைந்து, முதுமைத் தோற்றம் வந்துவிடும். இவர்கள் கருமை படர்ந்த இடத்தில், ஏலாதி தேங்காய் எண்ணெயும், பிண்டத் தைலமும் தடவி மசாஜ் செய்யலாம். உடல் முழுவதும்கூட மசாஜ் செய்யலாம். பிறகு, நவரா அரிசியுடன் ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த பவுடரைக்கொண்டு, நாங்கள் ஸ்க்ரப் செய்வோம். பிறகு, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகள் நீங்கி, தோல் பொலிவு அடையும்.
பச்சைப் பயறை பொடியாக அரைத்து, தயிருடன் கலந்து கை, கால், முகம் ஆகியவற்றில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, சிறிய ஐஸ்கட்டிகளை ஒரு பருத்தித் துணியில்வைத்து, மென்மையாக ஒற்றி எடுத்தால், முகம் பொலிவு பெறும். தக்காளிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வாரம் மூன்று முறை குளிக்கும் முன்பு தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், கறுப்பு நிறத் திட்டுகள் அகலும்.
தோல் வறட்சி    
                                                                                                                                  
குங்குமப்பூ, தேன், எலுமிச்சைச் சாறு, பால் மற்றும் ஆயுர்வேத எண்ணெய்கள் கொண்டு, மாதம் ஒரு முறை  உடல் முழுவதும் மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் பொலிவு பெறும். தோல் மினுமினுப்பாகும். அடிக்கடி தக்காளி ஜூஸ் அருந்துவது, தோலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.
முகப்பரு நீங்க
இளம் வயதினர் முகப்பரு வராமல் இருக்க, புதினா, கொத்தமல்லி மற்றும் ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த கலவையால், அடிக்கடி ஃபேஸ் பேக் போடலாம். வாரம் இரு முறை இப்படிச் செய்துவந்தால், முகப்பரு வருவதற்கான வாய்ப்புகள் குறையும். முகப்பரு வந்தால், கிள்ளக் கூடாது. கிரீம்கள் தடவக் கூடாது. எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முகப்பரு மறைந்ததும், கறுப்பு நிறத் திட்டுகள் உருவாவதைத் தடுக்க, முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.
எண்ணெய் சருமத்தினர் வாரம் இருமுறை அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரோடு அந்த வெந்தயத்தையும் சாப்பிட்டால், உடல் குளுமை அடையும். முகப்பருவும் வராது.

வியாழன், 19 மார்ச், 2015

எள் எனும் அருமருந்து

Posted By Muthukumar On March,19,2015
இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும், ஒரு சிறு செடியின் விதை இது. இதன் செடி, 1-2 அடி உயரம் வளரும். விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப் படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கறுப்பு எள், அதன் எண்ணெய் அதிகம் உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலைக் கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதி தரக்கூடியது.
உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும். மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும். எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, இசிவு வலி இவற்றைப் போக்கும். நல்ல பலம் தரக்கூடியது. எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகு நேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வாய்ப்புண் ஆறும். எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் விழுவது நிற்கும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும். பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் அதன் அளவைக் குறைக்கிறது. பலத்தைத் தருகிறது. பிரசவித்த பின் தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களும் எள்ளுடன் கூடிய உணவால் நல்ல பலன் பெறுவர். எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தினால் உதிரச் சிக்கல் குணமாகிறது.
எள்ளையும் கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட உதிரச் சிக்கல் வலி குறைகிறது. எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டை இவற்றைத் தொடர்ந்து கொடுக்க பூப்பு சீக்கிரம் ஏற்படுகிறது. எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, சூதகக் கட்டு வலி நீங்கும். பனைவெல்லம், எள், கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பயன்படுகின்றது. எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது. வெள்ளை எள் மத்தியமானது. எள் விரைவில் செரிப்பதில்லை. அதனால் அதை அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது. கப, பித்த தோஷங்களை அதன் அதிக அளவிலான உபயோகம் செய்வதால் கப, பித்த நோயாளிகள் அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது.