வியாழன், 19 மார்ச், 2015

எள் எனும் அருமருந்து

Posted By Muthukumar On March,19,2015
இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும், ஒரு சிறு செடியின் விதை இது. இதன் செடி, 1-2 அடி உயரம் வளரும். விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப் படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கறுப்பு எள், அதன் எண்ணெய் அதிகம் உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலைக் கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதி தரக்கூடியது.
உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும். மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும். எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, இசிவு வலி இவற்றைப் போக்கும். நல்ல பலம் தரக்கூடியது. எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகு நேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வாய்ப்புண் ஆறும். எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் விழுவது நிற்கும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும். பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் அதன் அளவைக் குறைக்கிறது. பலத்தைத் தருகிறது. பிரசவித்த பின் தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களும் எள்ளுடன் கூடிய உணவால் நல்ல பலன் பெறுவர். எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தினால் உதிரச் சிக்கல் குணமாகிறது.
எள்ளையும் கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட உதிரச் சிக்கல் வலி குறைகிறது. எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டை இவற்றைத் தொடர்ந்து கொடுக்க பூப்பு சீக்கிரம் ஏற்படுகிறது. எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, சூதகக் கட்டு வலி நீங்கும். பனைவெல்லம், எள், கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பயன்படுகின்றது. எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது. வெள்ளை எள் மத்தியமானது. எள் விரைவில் செரிப்பதில்லை. அதனால் அதை அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது. கப, பித்த தோஷங்களை அதன் அதிக அளவிலான உபயோகம் செய்வதால் கப, பித்த நோயாளிகள் அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக