வியாழன், 19 மார்ச், 2015

எள் எனும் அருமருந்து

Posted By Muthukumar On March,19,2015
இந்தியாவில் பெருமளவில் பயிரிடப்படும், ஒரு சிறு செடியின் விதை இது. இதன் செடி, 1-2 அடி உயரம் வளரும். விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப் படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கறுப்பு எள், அதன் எண்ணெய் அதிகம் உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலைக் கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதி தரக்கூடியது.
உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும். மலத்தை இறுக்கும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும். எள் நல்ல உணவுப் பொருள். எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, இசிவு வலி இவற்றைப் போக்கும். நல்ல பலம் தரக்கூடியது. எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகு நேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வாய்ப்புண் ஆறும். எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, ரத்த மூலத்திலிருந்து ரத்தம் விழுவது நிற்கும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும். பற்கள் ஈறுகள் தாடை இவற்றில் பலக் குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும், நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பிக் கொண்டிருப்பதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் அதன் அளவைக் குறைக்கிறது. பலத்தைத் தருகிறது. பிரசவித்த பின் தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களும் எள்ளுடன் கூடிய உணவால் நல்ல பலன் பெறுவர். எள்ளை ஊற வைத்த தண்ணீரை அருந்தினால் உதிரச் சிக்கல் குணமாகிறது.
எள்ளையும் கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட உதிரச் சிக்கல் வலி குறைகிறது. எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டை இவற்றைத் தொடர்ந்து கொடுக்க பூப்பு சீக்கிரம் ஏற்படுகிறது. எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, சூதகக் கட்டு வலி நீங்கும். பனைவெல்லம், எள், கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பயன்படுகின்றது. எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது. வெள்ளை எள் மத்தியமானது. எள் விரைவில் செரிப்பதில்லை. அதனால் அதை அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது. கப, பித்த தோஷங்களை அதன் அதிக அளவிலான உபயோகம் செய்வதால் கப, பித்த நோயாளிகள் அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது.

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஆரஞ்சு – நெல்லிக்காய்


நமக்கு எளிதாகக் கிடைக்கும் எதையும் நாம் சட்டைசெய்ய மாட்டோம். மிகக்குறைந்த விலையில், ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் நெல்லிக்காயை, நாம் பொருட்படுத்துவதே இல்லை. உள்ளூரில் கிடைக்கும் நெல்லிக்காயைவிட இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு மீதுதான் நமக்கு விருப்பம்.
அயலகப் பழங்களுக்குத் தந்த முக்கியத்துவத்தை, நெல்லிக்கனிக்கும் தந்திருந்தால் பல நோய்களிடம் இருந்து தப்பித்திருக்கலாம். விலை உயர்ந்த ஆரஞ்சுப் பழத்தை விட, விலை மலிவான நெல்லிக்காயில் அதிக சத்துக்கள் உள்ளன.
ஆரஞ்சு
  ஒரு நடுத்தர (100 கி) அளவு ஆரஞ்சில் 44 கலோரிகள், 250 மி.கி பொட்டாசியம், 19 கிராம் கார்போஹைட்ரேட், உள்ளன.
  ஒரு நாளுக்குத் தேவையான அளவைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான வைட்டமின் சிஐ அளிக்கிறது.
  ஆரஞ்சில் தையமின், ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், மற்றும் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் தாமிரம் நிறைவாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
 தூக்கம், தசைகள் இயக்கம், நினைவாற்றல் போன்றவற்றுக்குத் தேவையான நுண்ஊட்டச்
சத்தான கோலின் (Choline)இதில் உள்ளது. மேலும் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் செயல்திறனுக்கும் உதவுகிறது.
 இதில் உள்ள ஃபோலிக் அமிலம் மூளை செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிகள் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சி அடையும்.
 ஆரஞ்சில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தைத் தூண்டுகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது.
 இதில் உள்ள ஃபிளவனாய்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இதய நோய்க்கான வாய்ப்புகள் குறைகின்றன.

நெல்லிக்காய்
 ஆரஞ்சுப் பழத்தைவிட நெல்லிக்கனியில் வைட்டமின் சி 20 சதவிகிதம் அதிகம் உள்ளது.
 கர்ப்பிணிகளுக்கு தலைச்சுற்றல், வாந்தி அடிக்கடி வரும். அவர்கள் முழு நெல்லிக்காய் எடுத்துக்கொள்ளாமல் அதைத் துண்டுகளாக்கி தலைச்சுற்றல் ஏற்படும் போது எடுத்துக்கொண்டால் நல்ல பலன் தரும்.
 நெல்லிக்காயை ‘ஒன் மேன் ஆர்மி’ எனலாம். இதில் இருக்கும் எம்ப்ளிகானின் ஏ (EmblicaninA)  செல்களைப் புதியதாக உற்பத்தி செய்யும்; பாதிப்படைந்த செல்களை மறு சீரமைக்கும்.
 தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தால் உடல் புத்துணர்வோடும் இளமையோடும் இருக்கும். இதயத்தையும் சிறுநீரகத்தையும் பலப்படுத்தும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
 நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து, குடித்துவந்தால் பார்வைக் குறைபாடுகள் மறையும்.
 நெல்லிக்காய் சாறுடன், பாகற்காய் சாறு கலந்து சாப்பிட்டால் இன்சுலின் செயல்திறனை மேம்படுத்தும்.
 கொழுப்பைக் கரைக்கும் தன்மை உள்ளதால் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
 செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கல்,  வயிறு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு வயிறு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கிறது.
   தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம்   செல்லவே வேண்டாம் என்று பழமொழி உண்டு. ‘’தினம் அரை நெல்லிக்காய் சாப்பிட்டால், டாக்டரிடம் செல்ல வேண்டாம்” என்று  மாற்றி விடலாம்.