செவ்வாய், 9 டிசம்பர், 2014

குளிர் காலத்தில் கொஞ்சும் அழகு!


ஆங்காங்கே வெண்மை நிறத் திட்டுகளுடன் வறண்டு போகிற சருமம்…பொடுகும் பிசுபிசுப்புமாக பிரச்னைதருகிற கூந்தல்…சொரசொர கைகள்… தடித்தும் வெடித்தும் போகிற பாதங்கள்…இன்னும் இப்படி பனிக்காலத்தில் படையெடுக்கும் அழகுப் பிரச்னைகள் ஏராளம். வெயிலைப் பழித்த வாய், குளிரின் கொடுமையில் அனலுக்குத் தவிக்கும். ”வெயில் காலத்தைவிட, பனிக்காலத்தில் ஏற்படுகிற அழகுப் பிரச்னைகள் அதிகம். குளிர்காலம் முடிகிறவரை சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே, சருமம் மற்றும் கூந்தல்
அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்” என்கிறார் உஷாஸ் பியூட்டி கிளினிக் உரிமையாளர் உஷா.”வெயில் காலத்தில் உபயோகித்த க்ரீம் மற்றும் லோஷன்களுக்கு தற்காலிகமாக விடை கொடுங்கள். பனிக்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள அழகு சாதனங்களையே உபயோகியுங்கள். தரமான மாயிச்சரைசர் வாங்கிக் கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் முகம் கழுவிய உடனேயும், ஒவ்வொரு முறை ஈரத்தில் கைகளை வைத்த பிறகும் மாயிச்சரைசர் தடவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் ஹேண்ட்பேக்கில் மாயிச்சரைசர் இருக்கட்டும். சருமம் லேசாக ”வறள்”கிற மாதிரி உணர்ந்தாலும் உடனே மாயிச்சரைசர் தடவ மறக்காதீர்கள். சன் ஸ்கிரீன் மட்டும் விதிவிலக்கு. வெயில் காலத்தில் மட்டுமின்றி, பனிக்காலத்திலும் சன் ஸ்கிரீன் அவசியம். குறைந்த அளவு எஸ்.பி.எஃப் உள்ளதும் கோகோ பட்டர், ஷியா பட்டர் அல்லது கற்றாழை கலந்ததும், மாயிச்சரைசர் அடங்கியதுமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவும். வருடம் முழுக்க கூந்தலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும், பனிக்காலத்தில் பலவிதமான பிரச்னைகள் தலைதூக்கும். அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர் காலத்தில் கூந்தலை மிகவும் வறண்டு போகச் செய்யும். சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகித்து தலைக்கு மிதமாக மசாஜ் செய்து விட்டு, காலையில் எழுந்ததும் மிதமான ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். குளிர் காலம் முடிகிற வரை கூந்தலுக்கு ட்ரையர் உபயோகிப்பது, ஸ்ட்ரெயிட்டனிங் மாதிரியான சிகிச்சைகளை செய்து கொள்வதைத் தவிர்க்கவும். அடிக்கிற குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் தண்ணீரில் குளிப்பது இதமாகத்தான் இருக்கும். ஆனால், வெந்நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை அறவே நீக்கி விடும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது. சோப்புக்கு பதில் பாடி வாஷ் அல்லது குளியல் பொடி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும். பனி எட்டிப் பார்க்க ஆரம்பித்ததுமே சிலருக்கு உதடுகள் வெடித்து ரத்தமே கசியும். வைட்டமின் இ உள்ள லிப் பாமை அடிக்கடி உதடுகளில் தடவிக் கொள்வது அவற்றை வறண்டு, வெடிக்காமலிருக்கச் செய்யும். உதடுகளில் தோல் உரியாமலிருக்க, லிப் பஃப் உபயோகிக்கலாம். இதை இரவில் உதடுகளின் மேல் மென்மையாகத் தேய்த்துவிட்டு, காலையில் துடைத்து விடலாம்.பாத வெடிப்பும் இந்த நாட்களில் தவிர்க்க முடியாதது. வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை ஊற வைத்துத் தேய்த்து, துடைத்து விட்டு, தரமான ஃபுட் க்ரீம் அல்லது வாசலைன் தடவிக் கொள்ளவும். அதற்கு மேல் காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு படுத்துவிட்டு, காலையில் கழுவி விட்டால், பாதங்கள் வெடிப்பின்றி மென்மையாக இருக்கும். வீட்டிலேயே செய்ய சில சிகிச்சைகள்… அவகேடோ எனப்படுகிற பட்டர் ஃப்ரூட் பனிக்கால சருமப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். கரும்பச்சை நிறத்தில் மென்மையான பழமாகத் தேர்ந்தெடுத்து, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பாகத்தை சுரண்டி எடுக்கவும். அத்துடன், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து மசித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிடவும். சரும வறட்சியைப் போக்கி, சருமத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளையும் அளிக்கக் கூடியது இந்த பேக். ஐந்து பாதாம் பருப்புகளை எடுத்து, பாலில் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அத்துடன் சிறிது தேன், சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கைகளில் வட்டமாகத் தேய்த்து ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் சோப் உபயோகிக்காமல் கழுவவும். இது சருமம் சுருக்கங்கள் இன்றியும் வறண்டு போகாமலும் இருக்கஉதவும். 1டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர், கால் டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம், அரை டீஸ்பூன் ஓட்ஸ் பொடி எல்லாவற்றையும் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து, கால் மணி நேரம் ஊற வைத்த பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதுவும் சருமத்தை இளமையுடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

முதுகுவலி… முத்தான தீர்வுகள்!


முதுகுவலி… அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். இயல்பான இயக்கத்தையே முடக்கும் அளவுக்கு ஆபத்துள்ள இந்நோயைப் பற்றி, விழிப்பு உணர்வுத் தகவல்களை வழங்குகிறார், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் சண்முகசுந்தரம்.
”முதுகுவலி என்று சொல்வது, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்… இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள நரம்புகள் மூளையிலிருந்து கை – கால்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நரம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற்படுத்தும்.
காரணங்கள்: அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சியம் குறைவு, குடல்நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமிகளின் தாக்குதல் (காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும்புப் புற்றுநோய்… இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.
வயது: எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாருக்கும் வரலாம்.
கண்டறிவது எப்படி: சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சிறிது நேரம் அமர்வதுகூட இயலாததாக இருக்கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகுவலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலின் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப்பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.
சிகிச்சைகள்: ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய்வு, வலிநிவாரணி, நரம்புக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆலோ சனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சையே நிரந்தர தீர்வைத் தரும்.
இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத்தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால் வேறுவிதமான பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
எவ்வளவு செலவாகும்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந்து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்துகொள்ளமுடியும்.
வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது…
இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!”